Monday, September 11, 2006

வணக்கம்,

 

"சுவை புதிது,பொருள் புதிது,வளம் புதிது,சொற்புதிது.சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை,"என்று மகாகவி பாரதி தம் கவிதைகளை அறிமுகம் செய்துள்ள பாங்கே சத்தியமான, நிதர்சனமாக நின்றொளிர்கின்றது,என்று நீண்ட கால குடும்ப நண்பர் பாரதிகாவலர் முனைவர் இராமமூர்த்தி அவர்கள் 11/09/2002ல் ஒலிப்பேழையில் சொல்ல கேட்டிருக்கிறேன்.

 

மாகாகவி 39 ஆண்டுகளே வாழ்ந்தார்.எட்டயபுரம்,கடையம்,

சென்னை,புதுவை,காசி என்று பாரதி வாழ்ந்த இடங்கள் வரலாறாகும்.

1882ல் பிறந்து,சுதந்திரப் போரில் வீரக்கனல் கவிதைகளைப் பரப்பி முரசு கொட்டி முழங்கி,புதுவையில் இலக்கிய கருவூலங்களை உருவாக்கி,கடையத்திலும்,சென்னையிலும் வாழ்ந்து, 1921ல் அமரரான மாகாகவியின் கவிதைகள் என்றும் இருப்பவை.

 

85 ஆண்டுகள் கடந்திருந்தாலும்,தனது சமத்துவ,சீர்திருத்த பாடல்களால்,மொழிக்கு செம்மை சேர்த்தவர்.செந்தமிழ்ச் சீராளர், செப்பு மொழியில் கவி தந்த பேராளரை நினைந்து போற்றுவோம்.கீழே, சிங்கை கிருஷ்ணனின் "பாரதிப்பார்வை" கட்டுரை மலர்கிறது.

 

தமிழன்பகலா,

கண்ணன் நடராசன்

 

நல்லதோர் வீணை!

 

பாரதியின் நினைவு நாள் 11-09-2006.அதனை முன்னிட்டு பாரதியின் சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 
பாரதி ஒரு விடியலுக்காகப் பாடிய பிதாமகன்; பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும்  என்று பாடி அந்த எண்ணத்திலே மிகப்பெரும் வெற்றி கண்டவன்.


அவன் இன்று நம்மிடையே இல்லை. அவன் முகழ்க் கவிதைகளோடு மட்டுமே நாம்; அவனைச் சொல்லும்போது தமிழகக்கவி என்றோ புதுவைக்கவிஞன் என்றோ சுருக்கிச் சொல்லி விடாமல் தேசியக்கவி என்றும் மகாகவி என்றும் விரித்துச் சொல்லி நாம் விலாசமானவர்கள் என்று அவன் விலாசம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
 
பாரதி ஒரு பண்முகக் கவிஞன்; அவன் ஒரு கவிஞன் மட்டுமல்ல;
ஒரு சிறந்த தமிழாசிரியர்;

சிறந்த பத்திரிக்கை ஆசிரியர்;

ஒரு எழுத்தாளன்;
சிறந்த கட்டுரையாளன்;

சிறந்த சிறுகதை எழுத்தாளர்;

தலை சிறந்த நாவலாசிரியன்;

ஒரு சிறந்த நாடக கலைஞர்;

ஒரு மனிதாபிமானி;
அவன் ஒரு அரசியல்வாதி; சமூகச் சீர்திருத்தவாதி; தத்துவ ஞானி;
ஆங்கிலப் புலமையுள்ள தமிழ் எழுத்தாளன்; அவன் ஒரு சிறந்த
மொழிபெயர்ப்பாளன்; தமிழைத் தாயாகப் போற்றியவன் பாரதி.
சமூகக் கொடுமைகளை எதிர்த்துச் சதிராடும் ஒரு போராளி அவன்;
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; அவனை ஒரு பட்டியல்
போட்டு அதற்குள் அடக்கிவிடமுடியாது.

தேசீயக்கவிஞராக,விடுதலைக்கவிஞராக,புரட்சிக்கவிஞராக,
புதுமைக்கவிஞராக நாம் பாரதியைப் பார்த்தாலும் அடிப்படையில்
அவர் ஞான சித்தர்!
        

 'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாராப்பா!
 
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்...'


என்று தம்மை ஒரு சித்தன் என்றே அவர் கூறிக்கொள்கிறார்.பக்தி நெறி பரவும் திருக்கூட்ட மரபில் வாழையடி வாழையென வந்தவர் பாரதி.பொய் சாத்திரங்களில் உள்ள புன்மைகளை அவர் கடுமையாக சாடுகிறார்
       

  ''பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
   
பொய்மை யாகிப் புழுவென மடிவர்''


மக்கள் உணர்வுகளையே கவிதையாகப் பாரதி படைத்தார்;மக்கள் மொழியிலேயே கவிதைகளை உருவாக்கினார்.பாரதியின் கவிதைகள் நிலைபேறு பெற்றவை. நிலவுலகம் முழுவதையும் நல்வழியில்
செலுத்துபவை.காரணம் சொல் புதிதாகவும், பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓர் சமுதாயத்தை அமைக்க முயன்றிட்டார்.
     
பாரதியார் நாட்டு மக்களின் அறிவை வளர்க்க விரும்பினார்.அறியாமையை அகற்ற பாடுபட்டார்.


''
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை'' 

 

என்றார்.ஆற்றலை பெருக்க முயன்றார்.பொறித் தொழிலையும் மதித்தார். வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்தார்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ந்து, கெட்டுக்கிடக்கும் தமிழ் மக்களைச் சாடினார்.

 

வாய் இருந்தும் ஊமையராய்க்

காது இருந்தும் செவிடர்களாய்க்,

கண் இருந்தும் குருடர்களாய் வாழும் மக்களை வெறுத்தார்.

 

அறிவை தேடாமல், பல ஆயிரக்கணக்கான தெய்வங்களைத் தேடித்தேடி, அலைந்து, அலைந்து திரியும் மக்களைப் பாரதியார் அறிவிலிகள் என்று அழைக்கிறார்.தமிழ் மக்கள் பாமரராய், விலங்குகளாய்ப் பலர்
இகழ்ந்து பேசும் அளவிற்கு கெட்டு வாழ்கிறார்களே என்பதை எண்ணி, எண்ணி மனம் நொந்து போனார்.
     
            ''
நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
              
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
           
அஞ்சி அஞ்சிச் சாவார் -- இவர்
             
அஞ்சாத பொருளில்லை அவனிலே!


           
எண்ணிலா நோயுடையார் -- இவர்
             
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
           
கண்ணிலாக் குழந்தை கள்போல் -- பிறர்
             
காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்
           
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
              
நாலாயிரம் கோடி நயந்து நின்ற
           
புண்ணிய நாட்டினிலே -- இவர்
             
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்''


 
என்று சொல்லிச் சொல்லி பாரதியார் நெஞ்சம் பதைத்தார்.


அறியாமை,கொத்தடிமை,பெண்ணடிமை,தீண்டாமை,ஏழ்மை,வறுமை,இல்லாமை, போதாமை,கல்லாமை, கயமை,மூடபழக்கம், மூடநம்பிக்கை,பேதமை,தீயப் பண்புகள் போன்ற சமுதாயக் கேடுகளை களையப் பாடுபட்டார்.
 

   "தமிழ் மக்களுக்கு இயற்கை கடவுள்
      
நிலமும் வச்சான், பலமும் வச்சான்,
   
நிகரில்லாத செல்வமும் வச்சான்.,
      
ஒன்று வைக்க மறந்திட்டான்,
     
ஒன்று வைக்க மறந்திட்டான்,
   
அதுதான், புத்தியில்லை! புத்தியில்லை!''


பாரதியாரின் பாட்டை கேட்டு எல்லோரும் வியப்பும்,சிரிப்பும் கொண்டார்களாம். தமிழ் மக்கள் அறிவற்றவர்களாகத் திகழ்கிறார்களே என்பதை எண்ணி, பாரதியார் எப்படி எல்லாம் மனவேதனையுற்றிருந்தார் என்பதற்கு, மேலே சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியே தக்கதொரு சான்றாகும்.

 

எங்கும் நிறைந்த சிவசக்தியை பாடும் போது, தம்மை மறந்து பாடுகிறார்.பாரதியார் பராசக்தியை குறித்து பாடிய பாடல்கள் 55 -க்கு மேற்பட்டவை. அவர் பார்த்த பொருள் எல்லாம் பராசக்தியாகவே காட்சி அளித்தாள்.அதனால்தான் இந்தியாவை 'பாரத தேவியாக' பார்த்தார்.
         

 ''சுதந்தர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!'
  
என்று பாடுகிறார்.

        

 'காளியே! நீயே யாதுமாகி நிற்கின்றாய்! எங்குமாகி நீ நிறைந்துள்ளாய்.
 
எனில்,தீமையும் நன்மையும் உனது விளையாட்டுத்தானே! என்றார் பாரதி
        

''யாதுமாகி நினறாய்- காளி!
 
எங்கும் நீ நிறைந்தாய்;
 
தீது நன்மை எல்லாம் காளி!
 
தெய்வ லீலை அன்றோ?
 
பூதம் ஐந்து மானாய் - காளி!
 
பொறிகள் ஐந்து மானாய்
 
போதமாகி நின்றாய் - காளி!
 
பொறியை விஞ்சு நின்றாய்''

 

பாரதியார் 'பராசக்தி' என்னும் பெயரில் ஒரு தனி தெய்வத்தை வழிப்பட்டார் என்று சொல்வதற்கில்லை.பரம்பொருளையே அவர் 'தெய்வம் ஒன்றே' என்ற நம்பிக்கையுடைவர். ஆகையால், "ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்'' என்றும் சாதித்தவர்.எம்மதமும் சம்மதம் என்னும் கொள்கையுடைவர்.

 

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,வான் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையையே,அந்த சேர்க்கையின் படைப்புக்களையே. அந்தப் படைப்புக்களின் இயக்கங்களையே பராசக்தியாகவே பாவித்து பாரதியார் வழிபட்டார்.

 

பூதங்கள் தோறும்- புலன் தோறும்- பொறிகள் தோறும் கலந்து நிற்கும் பரம்பொருளையே பராசக்தியாக வருணிக்கிறார்.
  

இதன் விளக்கமே 'சிவசக்தி' பாடல்.
        

இயற்கையென்று உனையுரைப்பார் - சிலர்
  
இயங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்

செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
  
தீயென்பர், அறிவென்பர்,ஈசன் என்பர்
அன்புறு சோதியென்பார் - சிலர்
 
ஆரிகுட் காளியென் றுனைப்புகழ்வார்

இன்பமென றுரைத்திடுவார் - சிலர்
 
எண்ணருந் துன்பமென்றுநுனை யிசைப்பார்
மின்படு சிவசக்தி - எங்கள்
 
வீரைநின் திருவடி சரண் புகுந்தோம்

காண்பதெல்லாம் காளியின் வடிவமாகப்படுகிறது பாரதிக்கு!
    

நன்றி:சிங்கை கிருஷ்ணன்