Friday, July 27, 2007

ஆன்மீக இந்தியாவை அழித்தது யார்?

வணக்கம்,

இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில்,அகிலத்தில் நாம் எந்த இடத்திலிருந்தாலும் நினைத்து பார்க்கவேண்டியது சாதித்த சாதனைகள் மட்டுமல்ல சந்தித்த சோதனைகளையும்.

சாதனைகள் நம்மை பெருமிதம் அடையச்செய்தாலும்,சோதனைகளில் தான் பல பாடங்கள் மறைந்து கிடக்கிறது. நம் விடுதலை வேள்விகளைப் பற்றி அறிந்திருந்தாலும்,சில நேரங்களில்,அறியாத சில மன அமைதியிழகச்செய்யும் உண்மைகள் தெரியவருகிறது.கிளர்ச்சி அடையாமல்,அந்த இகழ்ச்சிகளை எப்படி வளர்ச்சி பாதையில் மானிட சக்தியின் துணையோடு திறம்பட சமாளிக்கலாம் என்பது தான் அடுத்த நாற்பது ஆண்டுகால வேள்வி.

பாவேந்தரின் வரிகளில் "தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம்,இவையுண்டு,தானுண்டு என்றில்லாமல்,தூய உள்ளம்,அன்புள்ளம்,பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம்,"ஒன்றே"என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் காணமுடியும்!

தன்னலம் தீர்ந்தாலே.எங்கும் சண்டையில்லை.மொழி,கலைகள்,ஆன்மீகம் மற்றும் பண்பாட்டிற்கு அழிவுமில்லை.

விடுதலைக்கு முன்,ஆங்கிலேயர்கள் நம் பண்பாட்டின் அடிதளத்தை நிலைகுலையச் சிந்தித்த சில கருத்துக்கள் தான்,கீழே தரப்பட்டுள்ள திரு.ஏ.எம்.ஆரின் குமுதம் சோதிட தலையங்க கட்டுரை.இக்கட்டுரையை "தமிழ்வாழை" யாகூ குழுமத்தில் சென்ற ஆண்டு அன்பர்களுக்கு அனுப்பிவைத்த திரு.ஸ்ரீராம் கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

170 ஆண்டுகளுக்கு முன்பு!

இத்தருணத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின், பிரபல உறுப்பினரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தவரும், 1834ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அமைத்த 'சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான மெக்காலே பிரபு நான்காண்டுகள் நமது நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதியதைக் கீழே தந்துள்ளோம்.


LORD MACAULAY'S ADDRESS TO THE BRITISH PARLIAMENT 2 FEBRUARY,1835

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their selfesteem, their native culture and they will become what we want them, a truly dominated nation."


பொருள்: ''நான் பரந்த இந்திய நாடு முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். அப்போது ஒரு பிச்சைக்காரன், ஒரு திருடன் என்று ஒருவர்கூட இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த அளவிற்குச் செல்வமும்,பொருளும் உணவுப் பண்டங்களும் நிறைந்த நாடு என்பது மட்டுமல்லாமல், இந்திய மக்களிடம் மிக உயர்ந்த, பண்பு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றையும் கண்டேன். இவற்றைப் பார்க்கும்போது இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் மக்களை நாம் என்றுமே வெல்ல முடியாது என்று நினைக்கிறேன். இதற்கு ஒரே வழி இந்நாட்டு மக்களின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய
  1. ஆன்மிகம்,
  2. கலாசாரம்,
  3. பண்பு,
  4. ஒழுக்கம்
ஆகியவற்றை அழிப்பதே ஆகும். இவ்வாறு அழிப்பதற்கு இந்திய மக்களுடைய மிகப் புராதனமான;
  • கல்விமுறை,
  • கலாச்சாரம்
ஆகியவற்றில் அன்னிய நாட்டு, ஆங்கிலேய கல்விமுறையைப் புகுத்த வேண்டும். அன்னிய ஆங்கிலேயக் கல்விமுறை தங்களுடைய மிகப் புராதனமான கலாசாரம், கல்வி ஆகியவற்றை விட உயர்ந்தது என்ற மோகம் கொண்டுவிட்டால், அவர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து விடுவார்கள்.

அவ்விதம் தங்கள் சுயமரியாதையை இழந்த மக்களை நாம் விரும்புவதைப்போல் அடிமைகளாக்கி, இந்தியாவை அடக்கி ஆள்வது முடியும்.''

நமது சுதந்திரம் எளிதாகக் கிடைத்ததல்ல!

யுகம் யுகமாக நாம் கடைப்பிடித்து வந்த மிக உயர்ந்த
  • கலாச்சாரம்,
  • பண்பு,
  • ஒழுக்கம்,
  • பக்தி,
  • நேர்மை
போன்ற தூய வாழ்க்கை நெறிமுறைகளைத் திட்டமிட்டு, சிறிதளவும் ஈவிரக்கமின்றி அழித்து, இந்திய மக்களையும் பிரித்து அடிமைகளாக்கினர் ஆங்கிலேயர்கள். பின்னர் நாட்டை விட்டுச் செல்லும்போதும் அதைப் பிளவுபடுத்திய ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றதற்கு எத்தனை,எத்தனை தியாகிகள் தங்கள் வாழ்க்கைச் சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்துள்ளனர் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

ஆங்கிலேயர்கள் அவர்கள் திட்டத்தின் முதல்படியாகச் செய்தது நமது உயர்ந்த கல்விமுறைகளையும் கலாச்சாரத்தையும் மாற்றி, ஆங்கிலேய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், கல்விமுறை ஆகியவற்றைப் புகுத்தியதே ஆகும். அதற்கு முன்னோடியாக இருந்தவர் இந்த மெக்காலே பிரபு.

மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட சரித்திரம்

துரதிருஷ்டவசமாக சுதந்திரம் பெற்றபிறகு நமது பாரதப் புண்ணியபூமியின் சென்றகால சரித்திரத்தையும், சரித்திர உண்மைகளையும், ஏராளமான அன்னியர்களால் நாம் பட்ட அவமானங்கள், துயரங்கள் ஆகிய எதுவுமே நமது
இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் செய்துவிட்டனர், சுதந்திர இந்தியாவின் நிர்வாகத்தை ஏற்ற அரசியல் கட்சியினர்!

உலகின் எந்த நாடாயினும், தங்களது சென்ற கால சரித்திரத்தை மக்களிடமிருந்து மறைத்ததில்லை. தேசபக்தியும், தியாகச் சிந்தனைகளும்
மக்களிடையே ஒற்றுமையும் ஏற்பட வேண்டுமானால் தங்கள் தாய்நாட்டின் சரித்திரத்தை ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டியது அடிப்படை அவசியமாகும். நாட்டின் பெருமையும் அதுவே!

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு நாம் கொடுத்த விலை என்ன என்பதை நமது குழந்தைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். தியாகிகள்
  • பகத்சிங்,
  • சுகதேவ்,
  • ஜான்ஸிராணி
  • இலட்சுமிபாய்,
  • சுபாஷ்சந்திரபோஸ்
போன்றவர்கள் தங்கள் இன்னுயிரைக் காணிக்கையாகப் பாரதத்தாயின் திருவடிகளில் அர்ப்பணித்து, அதன் பலனாகத்தான் இன்று நாம் சுதந்திர மக்களாக இருக்கிறோம்.

மகாத்மா காந்தி தன் வாழ்க்கைச் சுகங்கள் அனைத்தையும் சுதந்திரப் போராட்டத்திற்காகவே தியாகம் செய்தார். இவற்றையெல்லாம் இப்போது எழுதவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டுவிட்டது என்று கேட்கலாம். சுதந்திரம் பெற்றபின்பு நமது பாரதப் புண்ணியபூமி பல துறைகளிலும் உலகம் போற்றுமளவிற்கு முன்னேற்றமடைந்தாலும் நமக்குள் ஒற்றுமையின்றியும், பொதுவான தேசியக் கொள்கை எதுவுமில்லாத ஏராளமான சிறுசிறு அரசியல் கட்சிகளினாலும், அவர்களிடையே நிலவிவரும் தனிப்பட்ட போட்டி, பொறாமைகளாலும் சுதந்திர இந்தியாவின் அஸ்திவாரமே பலவீனப்பட்டு வருவது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

நமது இளைஞர்களும் யுகம்யுகமாக நாம் கடைப்பிடித்து வரும்
  • கலாசாரம்,
  • பண்பு,
  • கட்டுப்பாடு
ஆகியவற்றிலிருந்து விலகி மேல்நாட்டு நாகரிகத்தில் மோகம் கொண்டு தங்கள் இஷ்டப்படி கட்டுப்பாடில்லாமல் நடந்துவருவதும், பல குடும்பங்களில் இன்று விபரீத பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. நாகரிகம் என்றால் என்ன என்பதை உலகிற்குச் சொல்லிக்கொடுத்த நாடு பாரத நாடு. ஆனால் இன்று நாகரிகம் என்றால் ஏதோ மேலைநாட்டினரின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகள்தான் என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

மாணவ, மாணவியரும் படித்துப் பட்டம் பெற்றவுடன், வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதையே விரும்புகின்றனர். இத்தகைய நிலையில் இனியாவது நமக்கென்று உள்ள
  • புராதனக் கலாசாரம்,
  • பண்பு,
  • வாழ்க்கை நெறிமுறைகள்

ஆகியவற்றுடன், தீவிரமான தேச பக்தியுடன் அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேசத்திற்குத் தாங்கள் ஆற்றவேண்டிய புனித கடமைகளை உணர்ந்து நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டுமென வேண்டுகிறோம்.

நாட்டிற்கு உள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. இதனைக் கண்டுகொள்ளாமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு இனியும் செயல்பட்டால், சரித்திரம் நம்மை மன்னிக்காது.

என்றும் அன்புடன் உங்கள்,
ஏ.எம்.ஆர்

நன்றி: குமுதம் http://www.kumudam.com/magazine/Jothidam/2006-06-09/pg1.php

0 Comments:

Post a Comment

<< Home