Sunday, August 13, 2006

Manam Kothi Manithargal - An article by A.J.Gnanendran

நெடுத்து நிமிர்ந்து வளர்ந்திருக்கும் விருட்சத்தின் மீது தன் வலிமையான அலகுகளால் கொத்தி, புழுக்களைத் தேடி உண்ணும் அழகிய மரங்கொத்திப் பறவையை வியப்போடு நோக்குகின்றேன். பல வர்ணங்கள் கொண்ட எழில்மிக்க இந்தப் பட்சி இலாவகமாக உணவு வேட்டையாடுவதைப் பார்க்கும்போது, இறைவனின் சிருஷ்டிகளின் அற்புதம் தெரிகின்றது. அதேசமயம், பிறரின் மனதைக் கொத்திக் கொண்டு செல்லும் மனிதர்கள் ஞாபகத்திற்கு வருகின்றார்கள்.
 
நம்மைச் சுற்றி வாழ்கின்ற பலர், நம் மனங்களை ஈர்த்து, கொத்திக்கொண்டு போய்விடுகின்றார்களே. இவர்களால் இது எப்படி முடிகின்றது என்ற வியப்பே மனதுள் மேலிடுகின்றது.
 
இயந்திரமான வெளிநாட்டு வாழ்வில், நமக்கு அவசரமாகத் தேவைப்படுவது அதிரடி மாற்றங்கள்தான். அரைத்த மாவையே அரைக்கும் இயந்திரத்தனம் இடையிடையே மாறி, அந்த இடத்தில், நம்மை உற்சாகப்படுத்தும் விடயங்கள் இடம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.
 
உங்களைச் சுற்றி ஒரு தடவை பாருங்கள். ஒரு சிலரைச்சுற்றி எப்பொழுதும் ஏதாவது ஓரு கூட்டம் இருந்துகொண்டே இருப்பதை நம்மால் காணமுடிகின்றது. இவர்களால் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிகின்றது. இவர்களால் சுயநலம் அற்ற பொதுநலச் சேவை செய்ய முடிகின்றது. கீழே விழுந்தவரைக் கைபிடித்து மேலே தூக்கிவிட முடிகின்றது. இவர்களது தன்னலமற்ற செய்கைகள், எங்கள் மனங்களைக் கொத்திக்கொண்டு போய்விடுகின்றன. எப்படி இவரிடம் இந்தத் திறமை வந்தது என்ற மலைப்பு நம்மை ஆட்கொள்கின்றது. 
 
நம்மைச் சுற்றியுள்ளவர்களை விலக்கிவிட்டு, உலகின் பக்கம் பார்வையைத் திருப்புங்கள். இன்றும் வாழ்கின்ற, வாழ்ந்து மறைந்த பலர் மனம்கொத்திகளாக வாழும் அழகு நம்மைக் கவர்கின்றது.
 
இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தை, மேலும் இருட்டடித்த நிறப்பிரச்சனைக்காக சிறைக் கம்பிகளை எண்ணி, பின்பு நாட்டையே ஆண்ட நெல்சன் மண்டேலாவைக் காண்கிறோம். பல கோடி மக்களின் மனங்களைக் கொத்திக் கொண்டுபோகும் சக்தி இவருக்கு எப்படிக் கிடைத்தது?
 
எப்படி இவரால் இது முடிந்தது?
 
அரைநிர்வாணப் பக்கிரியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டு, தன் மண்ணை ஆக்ரமித்த வெள்ளையர்களுக்கு எதிராக, கத்தியின்றி யுத்தமின்றி இரத்தமன்றி போராடும் சக்தி, இன்று மகாத்மா என்று பலராலும் ஆராதிக்கப்படும் காந்திக்கு எப்படி சாத்தியமாயிற்று?
 
கோடானுகோடி மக்களின் மனங்களைக் கொத்திக் கொண்டு போகும் சக்தி இவரிடம் எப்படி வந்தது?
 
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
 ஆகுல நீர பிற."
என்கிறார் வள்ளுவர்.
 
மனதில் மாசற்றவராக இருப்பதே, நமது அனைத்து நற்செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. இதைவிடுத்து நாம் ஆற்றும் பிறசெயல்கள், வெறும் சலசலப்பை ஏற்படுத்துபவையாகவே அமைகின்றன என்கிறார் வள்ளுவர் பெருமான்.
 
அடியோடு சுயநலத்தைக் களைந்து, 'தாம்பெற்ற இன்பம் வையகம் பெறுக" என்ற பெருந்தன்மையும், கள்ளங்கபடற்ற இவர்கள் மனங்களுந்தான் இப்படி மனிதமனங்களைக் கொத்திக்கொண்டு போகும் வல்லமையைத் தருகின்றனவோ?
 
பிறப்பை ஆறுவகையாகப் பிரிக்கின்றார்கள்.
 
1) புல், செடி,கொடி போன்றவற்றிற்கு பரிச அறிவு என்று ஒன்று மட்டுமே இருக்கின்றது.
 
2) சங்கு, சிப்பி போன்றவற்றிற்கு பரிசமும், சுவையும் அறியும் இரண்டு அறிவுகள் உள்ளன.
 
3) எறும்புக்கோ இந்த இரண்டைவிட, மோப்பசக்தியும் சேர்ந்து மூன்று அறிவுகள்.
 
4) நண்டுக்கும், தும்பிக்கும் காணல் என்ற அறிவும் இணைவதால், நான்கறிவு கொண்ட உயிரினங்களாகி விடுகின்றன.
 
5) நான்கு கால் விலங்குகளுக்கோ கேட்டல் என்ற அறிவு கூடுவதால், ஐந்தறிவு வந்துவிடுகின்றது.
 
6) நாம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். பலதையும் பிரித்தறியும் பகுத்தறிவு நமக்குக் கிடைத்த ஆறாவது அறிவு. பெரிய வரப்பிரசாதம்.

சேற்றிலே புதைந்த யானையை, காக்கையும் கொத்தும் என்பார்கள். இங்கே காக்கை கொத்துவது யானையைச் சீண்டுவதற்காக. யானையின் இயலாமையில், சுகம்காண விழைகின்றது காகம். ஆனால் உங்களுக்கு அது வேண்டாம். நீங்கள் பிறர் மனங்களைக் கொத்தி இரணப்படுத்த வேண்டாம். பிறர் மனங்களைக் கொத்திக் கவரும் திறனைக் கற்றுக்கொள்ளுங்கள். பிறரைக் கொத்திக் கவரும் காந்த சக்தி உங்களிடம் இருக்குமானால், உங்கள் வாழ்வு ஒளிமயமானதாக, வளம்மிக்கதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
 
நன்றி: திரு ஞானேந்திரன்


The all-new Yahoo! Mail goes wherever you go - free your email address from your Internet provider.

0 Comments:

Post a Comment

<< Home